காஸா நகரை சுற்றி வளைத்த இஸ்ரேல் ராணுவம்… பிணப் பைகளில் திருப்பி அனுப்புவோம் என ஹமாஸ்
காஸா நகருக்குள் அத்துமீறும் இஸ்ரேல் ராணுவத்தினரை பிணப் பைகளில் திருப்பி அணுப்புவோம் என ஹமாஸ் ராணுவப் பிரிவு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹமாஸ் ராணுவப் பிரிவு எச்சரிக்கை
ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகரை தங்கள் தரைப்படைகள் முழுமையாக சுற்றி வளைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ள நிலையிலேயே, ஹமாஸ் ராணுவப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவிக்கையில், இனி போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்வைத்த கோரிக்கை இஸ்ரேல் தரப்பால் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.
மனிதாபிமான அடிப்படையில், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர் நிறுத்தம் தேவை என்ற ஜோ பைடனின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
வடக்கு காஸாவில் தாக்குதல் நீடித்து வரும் நிலையில், காயமடைந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்ட மக்கள் எகிப்துக்கான ரஃபா எல்லைக் கடப்பு வழியாக வெளியேறியுள்ளனர்.
இதுவரை 9,061 பலஸ்தீன மக்கள்
21 காயமடைந்த பாலஸ்தீனியர்கள் மற்றும் 72 குழந்தைகள் உட்பட 344 வெளிநாட்டினர் நேற்று திறக்கப்பட்ட இரண்டாவது நாளில் எல்லையைத் தாண்டியதாக எகிப்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பணயக்கைதிகளை மீட்கும் பொருட்டு, காஸா மீது ட்ரோன் விமானங்களை பயன்படுத்தியுள்ளது அமெரிக்கா. இதனிடையே, இஸ்ரேல் முன்னெடுத்த கொடூர தாக்குதல்களில் சிக்கி இதுவரை 9,061 பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 3,760 பேர்கள் சிறார்கள் என கூறப்படுகிறது.