தீர்வு கிட்டும் வரை நடமாடும் அம்புலன்ஸ் சேவையும் இடம்பெறமாட்டாது;தொடரும் பணிபகிஷ்கரிப்பு போராட்டம்
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை உடனடியாக தடுத்தல், மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று (02.11.2023) முதல் மாவட்ட ரீதியில் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.
இதேவேளை இன்றையதினம் வடக்கு மாகாணத்தில் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் வைத்தியர்கள் ஈடபடவுள்ளனர்.
ஊவா மாகாணத்தில் ஆரம்பமான முதலாவது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் நோயாளர்கள், வெளிநோயாளர் பிரிவினர் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
மேலும் மக்களுக்கான நடமாடும் அம்புலன்ஸ் சேவையில் இருந்து வைத்தியர்கள் நேற்றையதினம் முதல் விலகியுள்ளார்கள்.
வைத்தியர் சமல் விஜேசிங்க
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமல் விஜேசிங்க சம்பள அதிகரிப்பை முன்னிலைப்படுத்தி நாங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை.
அரசாங்கத்தின் முறையற்ற வரிகொள்கையினால் வைத்தியர்கள் நாளாந்தம் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.
இந்த நெருக்கடி தீவிரமடைந்தால் இலவச சுகாதார சேவை முழுமையாக வீழ்ச்சியடையும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தினோம்.
ஆனால் இதுவரை அரசாங்கத்தினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
மாறாக மிகுதியாக உள்ள வைத்தியர்களையும் நாட்டை விட்டு வெளியேற்றும் வகையில் புதிதாக வரிகொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.