சமுர்த்தி மானியத்தை தொடர வேண்டும்: ரணிலிடம் கோரிக்கை விடுத்த மொட்டுக் கட்சி
சிறிலங்கா பொதுஜன பெரமுன, அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் நான்கு விசேட கோரிக்கைகளை முன்வைத்து, உடனடியாக நடைமுறைபடுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளரின் கையொப்பமிடப்பட்ட கடிதத்தில் இந்த நான்கு கோரிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அதன்போது, சமுர்த்தி மானியத்தை தொடர வேண்டும், உர மானியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும்,நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பரவலாக்கப்பட்ட ஒதுக்கீட்டை மீள வழங்க வேண்டும், அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பின் போது வேலைவாய்ப்பை இழக்கக்கூடாது என்பனவே நான்கு கோரிக்கைகளாகும் என கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
அதிபருக்கு கடிதம்
மேலும், நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கான சிறந்த பொறிமுறை சமுர்த்தி இயக்கம் எனவும், எனவே இயக்கத்தின் பெயரை மாற்றுவது பொருத்தமானதல்ல எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுன அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக குறைந்த வருமானம் பெற்று வரும் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சமுர்த்தி நிதியுதவி திட்டமானது கடந்த சில மாதங்களுக்கு முன்னராகவே இடைநிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக அஸ்வெசும திட்டம் கொண்டுவரப்பட்டது.