கிளிநொச்சியில் சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு: 95 ஆவது நாளாக தொடரும் போராட்டம்
கிளிநொச்சி – பூநகரி, பொன்னாவெளி பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 95 ஆவது நாளாகவும் மக்கள் போராடிவரும் நிலையில், எந்த தீர்வுகளும் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கிராமமான பொன்னாவெளி கிராமத்தில் டோக்கியோ சீமெந்து உற்பத்திக்கு தேவையான சுண்ணக்கல்லை அகழ்வது தொடர்பான ஆய்வுகள் கடந்த ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எதிர்ப்பு நடவடிக்கை
தற்போது சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட இருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னாவெளி பகுதிகளை சேர்ந்த மக்கள் 95 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமது கோரிக்கைகள் தொடர்பில், வடமாகான ஆளுநர் மற்றும் மாவட்ட அரச அதிபர் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புகள் என்பவற்றிற்கும் என 28க்கும் மேற்பட்ட மகஜர்களை கையளித்துள்ளது.
இதுவரை உரிய அதிகாரிகளிடமிருந்து எந்த விதமான பதில்களும் கிடைக்கவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமது பிரதேசத்தில் குறித்த சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அயல் கிராமங்களான கிராஞ்சி வலைப்பாடு – வேரவில் ஆகிய பகுதிகளில் மக்கள் வாழ முடியாத ஒரு சூழல் ஏற்படும்
ஆகவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தமக்கான ஒரு நிரந்தரமான நியாயபூர்வமான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.