மூடப்படும் மரைன் ட்ரைவ் வீதி : மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை
கொழும்பு, பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்துடன் இணைந்த மேம்பாலத்தின் புணரமைப்பு நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.
இதன் காரணமாக மரைன் ட்ரைவ் வீதியின் ஒரு பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேம்பாலம்
கொழும்பு பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்துடன் இணைந்த மேம்பாலம் சேதமடைந்தமை தொடர்பான நிழல் படங்கள் சமூக வலையத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்த நிலையில், குறித்த மேம்பாலத்தை புணரமைக்குமாறு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன், இந்த மேம்பாலத்தை அகற்றி 10 நாட்களுக்குள் தற்காலிக வீதியை அமைக்குமாறும், ஐந்து மாதங்களுக்குள் புதிய மேம்பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், சிறிலங்கா வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் குறித்த மேம்பாலத்தின் புணரமைப்பு பணிகளை ஆரம்பித்துள்ளதோடு, தற்காலிக நடைபயணிகள் மேம்பாலமும் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.