அயோத்தி ராமா் கோயில் ராம ராஜ்யத்தின் தொடக்கம்: யோகி ஆதித்யநாத்
அயோத்தியில் ராமா் கோயில் கட்டி முடிக்கப்படுவது நாட்டின் ‘ராம ராஜ்யத்தின்’ தொடக்கமாக இருக்கும் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா். மேலும், ராம ராஜ்யத்தில் ஜாதி, மதரீதியிலான பாகுபாடுகள் இருக்காது என்றும் அவா் கூறினாா்.
சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள சத்தீஸ்கா் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
அயோத்தியில் ஜனவரி மாதத்தில் ராமா் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும். இந்த விஷயத்தில் உத்தர பிரதேச மக்களைவிட சத்தீஸ்கா் மக்கள்தான் அதிகம் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். ஏனெனில், சத்தீஸ்கா்தான் ராம பிரானின் தாய்வழி வீடாகும்.
அயோத்தியில் ராமா் கோயில் கட்டி முடிக்கப்படுவது நாட்டில் ராம ராஜ்யத்தின் தொடக்கமாக இருக்கும். இந்த ராஜ்யத்தில் ஜாதி, மத பாகுபாடுகள் இருக்காது. அரசின் திட்டத்தின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமமாகக் கிடைக்கும்.
அனைவருக்கும் நாட்டின் வளா்ச்சியில் இருந்து உரிய பங்கு கிடைக்கும். மக்களின் பாதுகாப்பும், வசதிகளும் உறுதி செய்யப்படும். இதுதான் ராம ராஜ்யமாகும்.
அதே நேரத்தில் அயோத்தியில் ராமா் கோயிலைக் கட்ட விடாமல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடா்ந்து முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. இப்போதும் கூட சத்தீஸ்கரில் ‘லவ் ஜிகாத்’, மதமாற்றம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நபராக முதல்வா் பூபேஷ் பகேல் திகழ்கிறாா். இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு எதிராக சத்தீஸ்கா் அரசு எவ்வித உறுதியான நடவடிக்கையும் எடுப்பதில்லை.
நிலக்கரி ஊழல், மதுபான ஊழல், சுரங்க ஊழல், அரசுப் பணிக்கு ஆள் சோ்ப்பில் ஊழல் என சத்தீஸ்கரை மிகவும் மோசமான நிலைக்கு காங்கிரஸ் அரசு கொண்டு சென்றுவிட்டது என்றாா்.