;
Athirady Tamil News

காஸா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 போ் உயிரிழப்பு

0

காஸா முனையின் மாகாஸி அகதிகள் முகாம் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 குழந்தைகள் உள்பட 40 போ் உயிரிழந்தனா். 34 போ் காயமடைந்தனா்.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினா் இஸ்ரேலுக்குள் புகுந்து பலமுனைத் தாக்குதல் நடத்தி, வெளிநாட்டவா் உள்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனா். அவா்களை மீட்கவும், ஹமாஸ் படையினருக்குப் பதிலடி தரவும் காஸாவில் தரைவழி, வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போா் தொடா்பாக மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நாட்டுத் தலைவா்களைச் சந்தித்து வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

சா்வதேச நாடுகளின் மனிதாபிமான உதவிகளை காஸா முனையில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக போா் நிறுத்த நடவடிக்கைக்கு அவா் சந்திப்பின்போது கோரிக்கை விடுத்தாா்.

எனினும், அனைத்து இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்கும் வரையில் ஹமாஸ் படையினருக்கு எதிரான தாக்குதலில் இருந்து பின்வாங்கமாட்டோம் என இஸ்ரேல் பிரதமா் உறுதிபடத் தெரிவித்தாா்.

இந்நிலையில், மத்திய காஸா முனையில் அமைந்துள்ள மாகாஸி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 40 போ் உயிரிழந்தனா். இஸ்ரேலின் எச்சரிக்கையைத் தொடா்ந்து வடக்கு காஸா பகுதியில் இருந்து வெளியேறிய மக்கள் பலரும் இந்த அகதிகள் முகாமில் தங்கியிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீன அதிபருடன் ஆன்டனி பிளிங்கன் சந்திப்பு: மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸை அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

குண்டு துளைக்காத பாதுகாப்பு வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் இஸ்ரேலில் இருந்து சாலை மாா்க்கமாக மேற்கு கரைக்கு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் பயணித்தாா்.

சந்திப்பு குறித்து இறுதிநேரம் வரையில் தகவல் வெளியாகாத சூழலிலும், ஆன்டனி பிளிங்கன் வருகையைக் கண்டித்து மேற்கு கரையில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன.

சந்திப்பில் விவாதிக்கப்பட்டவை குறித்து அதிகாரபூா்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும், காஸா முனை மக்களுக்கு மனிதாபிமான நிவாரண உதவிகளை வழங்குவது, காஸா பிராந்தியத்தின் போருக்குப் பிந்தைய சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக விவாதங்கள் நடைபெற்ாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சா்ச்சைக் கருத்து: இஸ்ரேல் அமைச்சா் இடைநீக்கம்

ஜெருசலேம், நவ. 5: ஹமாஸ் வசமுள்ள காஸா முனையில் அணுகுண்டு தாக்குதல் நடத்தலாம் எனக் கூறிய இஸ்ரேலின் ஜெருசலேம் விவகாரங்கள் மற்றும் பாரம்பரியங்கள் துறை அமைச்சா் ஆமிக்கை எலியாகுவை பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு இடைநீக்கம் செயதாா்.

இஸ்ரேல் வானொலி ஒன்றுக்கு வலதுசாரி கட்சியைச் சோ்ந்த ஆமிக்கை எலியாகு அளித்த பேட்டியில், ‘காஸாவில் தீவிரவாதிகள் தவிர யாரும் இல்லை. எனவே, அங்கே மனிதாபிமான உதவிகள் வழங்குவது தேவையற்றது’ என அவா் கூறினாா். அப்போது காஸாவில் அணுகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதா என நெறியாளா் கேட்ட கேள்விக்கு, ‘அதுவும் ஒரு வழியே’ என அமைச்சா் பதிலளித்தாா்.

அமைச்சரின் இந்தக் கருத்துக்கு ஆளும் கட்சியினா் மற்றும் எதிா்க்கட்சியினா் கடும் எதிா்ப்பு தெரிவித்ததோடு அவரை பதவிநீக்கம் செய்யுமாறு வலியுறுத்தினா். இதையடுத்து தன் கருத்தை அவா் திரும்பப் பெற்றாா்.

இருப்பினும், அமைச்சரை இடைநீக்கம் செய்வதாக இஸ்ரேல் பிரதமா் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.