ஜேர்மன் விமான நிலையத்திற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர்: பின்னணியில் ஒரு குடும்பப் பிரச்சினை…
ஜேர்மன் விமான நிலையம் ஒன்றிற்குள் ஆயுதங்களுடன் ஒருவர் நுழைந்து, பெண் குழந்தை ஒன்றை பிணைக்கைதியாக வைத்திருந்த சம்பவத்தால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் அவதியுற நேர்ந்தது. இந்நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் ஒரு குடும்பப் பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது.
ஆயுதங்களுடன் விமான நிலையத்துக்குள் நுழைந்த நபர்
சனிக்கிழமை இரவு, உள்ளூர் நேரப்படி, இரவு 8.00 மணியளவில், ஜேர்மனியின் ஹாம்பர்க் விமான நிலையத்துக்குள் கார் ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது.
காரிலிருந்த நபர், துப்பாக்கியால் வானத்தை நோக்கி இரண்டு முறை சுட்டதுடன், எரியும் போத்தல்களையும் வீசிவிட்டு, பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த ஒரு விமானத்தின் கீழே காரைக் கொண்டு நிறுத்தியுள்ளார்.
விமானத்திலிருந்தவர்களும், விமான நிலையத்திலிருந்தவர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட, ஏராளமான பொலிசார் காரை சூழ்ந்துகொண்டுள்ளார்கள்.
பின்னணியில் ஒரு குடும்பப் பிரச்சினை
உடனே, காரிலிருந்த நபர், எந்த எதிர்ப்பும் காட்டாமல் காரிலிருந்து இறங்கி சரணடைந்துள்ளார். அவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள். காரிலிருந்த பெண் குழந்தை மீட்கப்பட்டிருக்கிறாள், அவளுக்கு எந்த ஆபத்தும் இல்லை.
விடயம் என்னவென்றால், அந்தக் குழந்தை, காரில் வந்த அந்த நபரின் மகள்தான். அவர் தன் மனைவியைப் பிரிந்துள்ளார். மகள் தாயுடன் இருக்கவேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பார்கள் போலும். அந்த முடிவு அவருக்கு பிடிக்காததால், மகளைத் தூக்கிக்கொண்டு வெளியேறிய அந்த நபர், நேரே விமான நிலையத்துக்குள் நுழைந்திருக்கிறார்.
இன்னொரு விடயம், அவர் துருக்கி நாட்டவர். ஏற்கனவே கடந்த ஆண்டும் ஒரு முறை அவர் தன் மகளைத் தூக்கிக்கொண்டு துருக்கிக்குச் சென்றுவிட, ஜேர்மானியரான அவரது தாய் மீண்டும் குழந்தையை ஜேர்மனிக்குக் கொண்டுவந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.