;
Athirady Tamil News

தமிழர் தலைநகரில் அத்துமீறி குடியேறிய புத்தர் : மக்கள் விசனம்

0

தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் இன்று (06) காலை புத்தர்சிலை வைக்கப்பட்டமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்ற பொரலுகந்த ரஜமாகா விகாரைப்பகுதியில் இன்று (06) காலை பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள மக்களினால் இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் ஆரம்பத்தில் புத்த விகாரை கட்டுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் அதற்கு அப்பகுதி மக்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

தடையுத்தரவையும் மீறி

அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு ஆளுநரிடம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் பொதுமக்கள் முறையிட்டதையடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் ஆளுநரினால் குறித்த கட்டுமானங்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் தடையுத்தரவையும் மீறி குறித்த பகுதியில் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு எதிராக பொதுமக்கள் (03.09.2023)அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன் பின்னர் (09.09.2023) அன்று குறித்த பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை நடப்பட்டு தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் எவ்வித அனுமதி இல்லாத நிலையிலும் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு இன்றைய தினம் (06) காலை குறித்த பகுதியில் இரண்டு புத்தர்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

பௌத்த மக்களே இல்லாத, தமிழ் மக்கள் காலாகாலமாக வாழ்ந்து வருகின்ற இப்பகுதியில் இன முறுகலை ஏற்படுத்தும் விதமாகவும், இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் முகமாகவும் சிலர் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாகவும், புத்த விகாரையின் கட்டுமானங்களைத் தொடர்ந்து இப்பகுதிகளைச்சூழ சிங்கள மக்களை குடியேற்றும் திட்டம் உள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.