ரஷ்யாவின் எதிர்பாராத திடீர் தாக்குதல்: ஸ்தம்பித்துப்போன உக்ரைன் நிகழ்வு
உக்ரைனில் இராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற கட்டடத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 19 உக்ரைன் வீரா்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைனின் ஸபோரிஷியா பகுதியில் கடந்த 03ஆம் திகதி நடைபெற்ற நிகழ்ச்சியின் போது இந்தத் தாக்குதல் தவிா்க்கப்பட்டிருக்கக் கூடிய துயரச் சம்பவம் என்று அதிபா் வொலோடிமீா் ஜெலென்ஸ்கி விமா்சித்துள்ளாா்.
விசாரணைக்கு உத்தரவு
போா் நடைபெற்றுவரும் சூழ்நிலையில், பாதுகாப்புப் படையினா் பெரும் கூட்டமாகக் கூடும் இத்தகைய நிகழ்ச்சி போா் முனைக்கு அருகே நடைபெற்றது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ருஸ்தம் உமெரொவ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, உக்ரைனின் ஒடெஸா பகுதியிலும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 8 போ் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தங்கள் நாட்டைச் சோ்ந்த ஸாலிவ் துறைமுகத்தைக் குறிவைத்து உக்ரைன் ஏவுகணைகளை வீசியதாகவும், இதில் ஒரு கப்பல் மிதமாக சேதமடைந்ததாகவும் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.