சம்பந்தனின் பதவி துறப்பு விவகாரம்: கட்சி கூட்டத்தில் காரசாரமான விவாதம்
இரா.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டுமென சுமந்திரன் கூறிய விடயம் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று முன் தினம் (05.11.2023) வவுனியாவிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர் ஒருவர் ஊடகமொன்றுக்கு இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
கருத்து தொடர்பான விளக்கம்
அவர் மேலும் தெரிவிக்கையில், “கூட்டத்தில் சுமார் 15 மத்தியகுழு உறுப்பினர்களே கலந்து கொண்டிருந்தனர். சேனாதிராசா கூறுகையில், சுமந்திரனின் ஊடகப் பேட்டி சலசலப்பை ஏற்படுத்தியிருந்ததாகவும், அது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் அந்த பேட்டியில் இரா.சம்பந்தன் பற்றிய தவறான கருத்து உருவாகி விடக்கூடாது என்பதற்காகவே அப்படி பேசியதாக சுமந்திரன் விளக்கமளித்தார். இருந்தாலும் அவரது பதில் தேவையைற்றது அதை தவிர்த்திருக்கலாம் என நாடாளுன்ற உறுப்பினர் சிறீரதன் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன் சுமந்திரனுக்கு இடையில் சிறு விவாதம் ஏற்பட்டது” என அந்த பிரமுகர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் நடந்த சம்பவம்
அத்துடன் “சிறீதரன் பேசிய போது மட்டக்களப்பில் நடந்த சம்பவமொன்றை சுட்டிக்காட்டினார். பொன் செல்வராசாவின் இறுதிக் கிரியையில் கலந்து கொண்ட சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்டத்தின் தலைமையை 32 வயதான இளம் நாடாளுமன்ற உறுப்பினரின் கைகளில் ஒப்படைத்து விட்டே அவர் காலமாகியதாக பேசினார்.
அது தவறான கருத்து. அப்படி செல்வராசா ஒருபோதும் சொன்னதுமில்லை. இப்படியெல்லாம் இல்லாததையெல்லாம் ஏன் பேசுகின்றீர்கள். அவரது இறுதிக்கிரியையில் சுமந்திரன் இப்படி பேசினார். அந்த கிரியைக்கு அந்த நாடாளுமன்ற உறுப்பினரே வரவில்லை.
இறுதிக்கிரியையில் கலந்து கொண்ட 10 பேராவது இது பற்றி என்னிடம் சுட்டிக்காட்டினார்கள் என சிறீதரன் தெரிவித்ததற்கு உடனே சாணக்கியன் அந்த 10 பேரில் 5 பேரை எனக்கு தெரியும் என்றார். அதேநேரம் தான் பட்டிருப்பு தொகுதியின் தலைமையை ஏற்க வேண்டுமென பொன். செல்வராசா அண்ணர் விரும்பியிருந்தார் என சாணக்கியன் கூறியதாகவும்” அந்த பிரமுகர் சுட்டிக்காட்டியுள்ளார்.