சென்னை பல்லாவரத்தில் இடிக்கப்பட்ட 700 வீடுகள் – வாழ்ந்த வீட்டை பார்த்து கதறி அழுத பெண்!
சென்னை பல்லாவரம் அருகில் அடையாற்றை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக கூறி 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வீடுகளை இடித்துள்ளது தமிழ்நாடு அரசு.
ஆக்கிரமிப்பு வீடுகள்
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையை ஆக்கிரமித்து 700 வீடுகள் கட்டி பொதுமக்கள் வசித்து வந்தனர். கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு பிறகு நீர் நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை எவ்வித சமரசமும் இன்றி அகற்றுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி நீர் பாய்ந்தோடும் அடையாறு ஆற்றின் கரையோரம் அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடிக்கும் பணியில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடும் எதிர்ப்பு
அந்தவகையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ‘டோபிகானா’ தெருவில் ஆக்கிரமிப்பு வீடுகளை ஜேசிபி எந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகளை பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்தனர். ஆனால் எதிர்ப்புகளை மீறி ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது எதிர்ப்பு தெரிவித்து ஒரு பெண் “தான் பல வருடமாக குடியிருந்த வீடு கண் முன்னே இடித்து தள்ளப்படுகிறதே” என்று கதறி அழுதுள்ளார். இது தொடர்பான வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சென்னை பல்லாவரம் அருகில் அடையாற்றை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக கூறி 700 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வீடுகளை இடித்துள்ளது தமிழ்நாடு அரசு. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ஒரு பெண் கண்ணீர் விட்டு கதறி அழுதார். pic.twitter.com/n9bxNd2QP2
— velmurugan (@velmurugantheni) November 7, 2023