வருமான வரித்துறை ரெய்டு… என்ன பதில் சொன்னார் அமைச்சர் எ.வ.வேலு?
கடந்த ஐந்து நாட்களாக திருவண்ணாமலையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு, அவரது கல்லூரி, எ.வ.வேலுவின் மகன் கம்பன் வீடு, அவர்களோடு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மட்டும் 20 கார்களில் 200க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இரண்டு டெம்போ வாகனங்களில் மத்திய ரிசர்வ் படை போலீஸ் பாதுகாப்புடன் 5 நாட்களாக சோதனை நடத்தினர். வருமானவரித்துறை சோதனை முடிவில், பறிமுதல் செய்ததாக கூறப்படும் பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக சீலிடப்பட்ட 2 சூட்கேஸ்களில் திருவண்ணாமலை அண்ணா சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகத்துக்கு வருமான வரித்துறையினர் கொண்டு சென்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, ரெய்டு என்ற பெயரில் தனது ஓட்டுநரை வருமான வரித்துறையினர் அச்சுறுத்தியதாக கூறினார். சோதனையில் பிடிபட்ட பணம் தனது குடும்பத்தினருக்கு சொந்தமானது அல்ல என்றார். தன் வீட்டிலோ, தன் மனைவி வீட்டிலோ, தன் மகன் வீட்டிலோ ஒரு பைசா கூட எடுக்கவில்லை என்றும் எ.வேலு. கூறினார்.
சமூக வலைதளங்கள், ஊடகங்களில் வெளியான கற்பனைக் கதைகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில் இருப்பதாக தெரிவித்த அமைச்சர், தான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், படிப்படியாக தொழில் செய்து வளர்ச்சி அடைந்ததாகவும் குறிப்பிட்டார். திருவண்ணாமலையில் தொடர்ந்து 6 முறை மக்கள் பிரதிநிதியாக உள்ளதாக கூறிய அமைச்சர், பொதுவாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடித்து வருவதாக கூறினார்.
மேலும், நேர்மையாக சம்பாதித்த பணத்தை வைத்தே அறக்கட்டளை, கல்வி நிறுவனங்களை உருவாக்கியதாக கூறிய அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்திலேயே அறக்கட்டளையில் இருந்து விலகிவிட்டதாக கூறினார். 2013 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட 11 லட்சம் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த வழக்கலிருந்து உச்சநீதிமன்றமும் தன்னை விடுவித்ததை சுட்டிக்காட்டினார். வேறு எந்த பிரதமர் காலத்திலும் எதிர்க்கட்சியினர் மீது இவ்வளவு வருமானவரி சோதனை நடந்ததில்லை என்றும் அமைச்சர் எ.வ.வேலு சாடினார்.
அமைச்சர் என்ற முறையில் தன்னிடம் புகார்களை சொல்ல வந்தவர்களிடம் ஐடி அதிகாரிகள் விசாரிப்பதா என வினவிய அவர், கல்லூரி ஊழியர்களை தனித்தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாகவும் தெரிவித்தார். தன்னுடைய நேர்முக உதவியாளரே கண்ணீர் விட்டு கதறும் அளவிற்கு வருமான வரித்துறையினரால் நிர்பந்திக்கப்பட்டதாக அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
அப்பாசாமி நிறுவனத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்த அமைச்சர், காசா கிராண்ட் உரிமையாளர் யார் என்றே தெரியாது என்றார். ரெய்டுக்கு அஞ்ச மாட்டோம்.. சட்டப்படி நடந்து கொள்வோம்.. ரெய்டை காட்டி தங்களின் செயல்பாட்டை நிறுத்தமுடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சோதனை நடத்திய அதிகாரிகளை குறைகூற விரும்பவில்லை என்று தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு அம்பு எய்தவர்கள் எங்கோ உள்ளதாக சாடினார். தனது இலக்கு நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெல்வதே என்று தெரிவித்த அவர், தேர்தல் பணிகளை செய்யவிடாமல் தடுப்பதற்காகவே இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.