இலங்கையில் அதிகரித்து வரும் இணையக்குற்றங்கள்: பின்னணியில் உள்ள வெளிநாட்டவர்கள்
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டவர்களால் இணையத்தின் ஊடாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் அதிகரித்து வரும் இணையக்குற்றங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது நிகழ்கின்ற இணையக்குற்றங்களில் வெளிநாட்டவர்களது ஈடுபாடு அதிகரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இணைய வர்த்தக மோசடி
அதன்படி, ஒன்லைன் மூலமான நிதி மோசடி, தனி நபர்களின் தரவுகளைத் திருடுதல் மற்றும் இணைய வர்த்தக மோசடிகள், போன்ற குற்றங்களில் இலங்கையில் சுமார் 40 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல தூதரகங்களில் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சில வெளிநாட்டு பிரஜைகள் பல்வேறு நாடுகளில் உள்ளவர்களின் கணக்குகளில் இருந்து பல மில்லியன் ரூபாவை இணையத்தின் ஊடாக மோசடி செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் கிடைக்கப்பற்றுள்ளன.
சட்டம் ஒன்று இயற்றப்படவேண்டும்
அண்மையில் மைக்ரோசொப்டின் பாதுகாப்பு புலனாய்வு வெளியிட்டுள்ள அறிக்கையின் 21ஆவது பதிப்பின்படி, சைபர் குற்றவாளிகள் கிரிப்டோகரன்சி மைனிங் மால்வேர் (Cryptocurrency mining malware) இனைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரின் கணினிகளின் மூலம், பிட்காயின்கள் (bitcoin) போன்ற கிரிப்டோகரன்சி (Cryptocurrency) நாணயங்களை வெட்டியெடுப்பதன் மூலம் சட்டவிரோதமாக இலாபம் ஈட்டும் குற்றம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி இலங்கையிலும் தற்போது இணையக்குற்றங்கள் அதிகரித்து வருகின்றது
எனவே இவ்வாறான குற்றங்களைத் தடுத்து, இந்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்தினால் சட்டம் ஒன்று இயற்றப்படவேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.