டீ கொடுக்காததால் ஆபரேஷனை பாதியில் விட்டு சென்ற மருத்துவர்!
டீ கொடுக்காததால் ஆபரேஷனை பாதியில் விட்டு சென்ற மருத்துவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. பணியில் இருந்தபோது டீ கொடுக்காததால் கோபமடைந்த மருத்துவர், அறுசுவை சிகிச்சையை பாதியிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
மருத்துவத்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். உண்மையில் என்ன நடந்தது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள மௌடா மண்டல் அரசு மருத்துவமனையில் நவம்பர் 3-ஆம் திகதி 8 பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு வந்தனர். மருத்துவர் தேஜ்ரங் பாலாவி நான்கு பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்தார். அதன் பிறகு அவர் மற்ற பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக மயக்க மருந்து கொடுத்திருந்தார்.
இதற்கிடையில், தேஜ்ரங் பாலாவி மருத்துவமனை ஊழியர்களிடம் ஒரு கோப்பை தேநீர் கொண்டு வரும்படி கூறினார். ஆனால் சரியான நேரத்தில் டீ கொண்டு வராததால் ஆத்திரமடைந்த மருத்துவர் எஞ்சிய அறுவை சிகிச்சைகளை செய்யாமல் எதிர்பாராதவிதமாக ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியேறினார்.
சம்பவத்தன்று நான்கு பெண்களுக்கும் மயக்கமருந்து கொடுத்த காரணத்தினால் மயக்கமடைந்துள்ளனர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் மருத்துவர் சென்று விட்டார்.
இது குறித்து பெண்களின் குடும்பத்தினர் உடனடியாக மாவட்ட மருத்துவ அலுவலரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய, வேறு மருத்துவர் நியமிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பணியில் இருந்த டாக்டர் பாலாவியின் அலட்சியப்போக்கால் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டியது. தற்போது இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாக்பூர் ஜில்லா பரிஷத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சௌமியா சர்மா கூறியுள்ளார்.