மன்னாரில் புதிய காற்றாலை மின் நிலையத்தை அமைக்க திட்டம்
மன்னார் படுகையில் 250 மெகாவாட் திறன் கொண்ட புதிய காற்றாலை மின் நிலையத்தை அமைப்பதற்காக, இந்தியாவின் அதானி குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் பணி விரைவுப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மின்சக்தி அமைச்சு இதற்கான நடைமுறையை விரைவுபடுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதன்படி நவம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து உடன்படிக்கைகளையும் கைச்சாத்திடுவதற்கு அமைச்சு தயாராக உள்ளது.
2009 மின்சாரச் சட்டத்தின்படி, எந்த ஒரு தனியார் நிறுவனமும் உள்ளூர் மின் உற்பத்திக்கு ஒரு கேள்விப்பத்திர செயல்முறையைப் பின்பற்ற வேண்டும்.
ஆனால் இந்த திட்டம், இரண்டு அரசுகளுக்கு இடையிலான திட்டம் என்ற அடிப்படையில், கேள்விப்பத்திர முறை பின்பற்றப்படவில்லை.
இந்தநிலையில் 30 வருடங்களுக்கு செய்துக்கொள்ளப்படும் இந்த உடன்படிக்கையின்கீழ், உற்பத்தி செய்யப்படும் ஒரு மின்சார அலகு 46 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.