பெண்ணை கொன்ற நபருக்கு தூக்கு தண்டனை; கிளிநொச்சி நீதிமன்றம் அதிரடி!
பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு இன்று வியாழக்கிழமை (09) கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சம்பவம் இடம்பெற்று ஒன்பது வருடங்களின் பின்னர் சந்தேகநபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் திகதி, கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் மாத்தறை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண்னை வெட்டிப் படுகொலை செய்து கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட முதலாவது மரண தண்டனை
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அயலில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்தின் விடுதியில் இருந்து மோப்ப நாயின் உதவியுடன் கொலைச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில வழக்கு தொடரப்பட்டு இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எம் .ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிரிக்கு தீர்ப்பு வாசித்துக் காட்டப்படதுடன் எதிரியின் இறுதிக் கருத்தும் கேட்டதை தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு வழங்கும் போது அனைவரும் எழுந்து நின்றதுடன் நீதிமன்றத்தின் அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டு நீதிமன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட முதலாவது மரண தண்டனை தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.