இலங்கையில் இன்னும் அவல நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள்!
இலங்கையில் அமைக்கப்பட்டிருந்த பிரித்தானிய கோப்பி தோட்டங்களில் பணிபுரிய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அழைத்துச்செல்லப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் தமிழர்கள் இன்னும் அவல நிலைக்கு உட்பட்டுள்ளதாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது.
அந்த தமிழர்களின் கண்ணியம் மற்றும் சமத்துவ வாழ்வுக்கான உரிமைக்கான போராட்டம் இலங்கையிலும் தமிழகத்திலும் இன்னும் தொடர்வதாக ஹிந்து குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் ‘மலைநாட்டுத் தமிழர்கள்’ என்று அழைக்கப்படும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட தொழிலாளர்கள், முதன்முதலில் 1823 இல் இலங்கைக்கு கோப்பி செய்கைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
கோப்பி தோட்டங்கள் ஒரு வகை நோயால் பாதிக்கப்பட்டதால், ஆங்கிலேயர்கள் 1860 களில் தேயிலை பயிர்செய்கைக்கு மாறினார்கள்.
மீள்குடியேற்றம்
இந்தநிலையில் இலங்கையில் இந்திய வம்வாவளித்தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தமையானது, சிங்கள மக்களை வெறுப்படைச்செய்தமையால், இந்தியாவும் இலங்கையும் மலையகத் தமிழர்களில் கணிசமான சனத்தொகையை இந்தியாவிற்கு ‘திரும்ப’ அனுப்புவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தன.
தாயகம் திரும்பியோருக்கு மாநாட்டின் முன்னாள் செயலாளரும், மலையக மக்கள் மீள்குடியேற்றச் சங்கத்தின் பொதுச் செயலாளருமான சந்திரசேகரன் இதனை தெ ஹிந்துவிடம் தெரிவித்துள்ளார்.
1964 இல் கையெழுத்திடப்பட்ட சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் சிறிமாவோ-காந்தி ஒப்பந்தம் என்பன சுமார் ஐந்து லட்சம் இலங்கைத் தமிழர்களை இந்தியாவில்; மீள்குடியேற வழிவகுத்தது.
அவர்கள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் குடியேற்றப்பட்டனர்.
தமிழகம் திரும்பியவர்களின் வாழ்வாதாரத்திற்காக நீலகிரி மற்றும் வால்பாறையில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் என்ற அமைப்பை தமிழ்நாடு அரசு அமைத்தது. இந்தநிலையில், இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹட்டனில் பிறந்த 72 வயதான பி.கிருஸ்ணன் என்பவர், 1970 ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் 19 வயதில் இந்தியாவிற்கு பயணம் செய்ததை தெ ஹிந்துவிடம் நினைவுக்கூர்ந்துள்ளார்.
இந்தியாவுக்கு திரும்பியதும் தோட்டங்கள் அமைக்கப்படுவதற்காக குன்னூரைச் சுற்றியுள்ள காடுகளை அழிக்குமாறு இலங்கையில் இருந்து திரும்பியவர்கள் உடனடியாக பணிக்கப்பட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.