ஊழலை ஒழிப்பதில் நம்பிக்கை இல்லை என்கிறார் மைத்திரி
இலங்கையில் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என சிறிலங்கா சுதந்திர கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
சிறிலங்கா கிரிக்கெட் சபையை நீக்கி இடைக்கால குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலேயே, கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா கிரிக்கெட் தலைவர்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“சிறிலங்கா கிரிக்கெட் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் சபையை பதவி நீக்கம் செய்வது தொடர்பான நாடாளுமன்ற விவாதம் நேற்றைய தினம்(9) நடைபெற்றிருந்தது.
இது தொடர்பான பிரேரணையும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. எனினும், இந்த நடவடிக்கையின் மூலம் சிறிலங்கா கிரிக்கெட் சபையில் உள்ள ஊழலை தடுக்க முடியுமா எனும் கேள்வி எனக்கு எழுந்துள்ளது.
ஊழல் நடவடிக்கை
ஏனெனில், இதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் சரிவர நிறைவேற்றப்படவில்லை. எனது பதவி காலத்தின் போது ஊழல் நடவடிக்கைகளை தடுக்கவும் அவற்றுக்கு எதிரான விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகளை நிறைவேற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஊழல் நடவடிக்கைகள் தொடர்பான நான்கு விசாரணைக்குழுக்களை நான் நியமித்தேன். இந்த குழுக்களின் விசாரணை அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த குழுக்களின் நடவடிக்கைகள் குறித்த விடயங்களை மக்கள் நன்கு அறிந்திருந்தார்கள்.
சிறிலங்கா கிரிக்கெட்
எனினும், எனது ஆட்சிக்காலத்தின் பின்னர் இந்த ஆணைக்குழுக்களுக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது.
இந்த பின்னணியில், சிறிலங்கா கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், அதில் பல ஊழல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. கடந்த பல வருடங்களாக அவை இணங்காணப்படவில்லை.
கிரிக்கெட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் திருடப்பட்டன. கிரிக்கெட் மாத்திரமின்றி ஏனைய விளையாட்டுத் துறைகளிலும் இது நடைபெற்றது.
இந்த நிலையில், கிரிக்கெட் குறித்து நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை போன்ற தீர்மானங்கள் எதிர்வரும் நாட்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.” என்றார்.