காஸா போரால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி : எரிபொருள் வழங்குவதில் சிக்கல்
காஸாவில் ஏற்பட்டுள்ள போர் நடவடிக்கையினால் எரிபொருள் விநியோக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் எரிபொருள் இருப்புக்களை பாதுகாப்பாக பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதிக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கும் சேமிப்பதற்கும் போதிய நிதியின்மை மற்றும் எரிபொருளை சேமிப்பதற்கு போதுமான வசதிகள் இல்லை.
நாட்டில் 30 நாட்களுக்கு போதுமான எரிபொருள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பான எரிபொருள் இருப்புக்களை பராமரிக்கும் முறைக்கு 400 முதல் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருள் கையிருப்பு
தற்போது, எண்ணெய் நிறுவனம் 30 நாள் எரிபொருள் இருப்புக்களை பராமரிக்க 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.
போதிய நிதி மற்றும் சேமிப்பிடம் இல்லாத காரணத்தால் எதிர்காலத்தில் இருப்பு வைப்பது சிரமமான போதிலும், அடுத்த வருடம் ஜூன் மாதம் வரை சமாளிக்கலாம் என அமைச்சின் செயலாளர் கோப் குழுவிடம் இந்த வாரம் அறிவித்துள்ளார்.
சேமிப்பு வசதிகள்
அதுமட்டுமல்லாமல், திருகோணமலையில் உள்ள 24 எண்ணெய் தாங்கிகளில் 12 தரம் உயர்த்தி சேமிப்பு வசதிகளை மேம்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் தற்போது 60 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல், 40 ஆயிரம் மெற்றிக் தொன் பெட்ரோல், 3500 தொன் ஒக்டேன் 95 பெட்ரோல் மற்றும் 20 ஆயிரம் மெற்றிக் தொன் விமான எரிபொருள் உள்ளதாக எரிபொருள் பங்கு மீளாய்வுக் குழு வெளிப்படுத்தியுள்ளது.