கிறிஸ்மஸ்,புத்தாண்டு காலத்தில் ஏற்படவுள்ள தட்டுப்பாடு
கடந்த 08ஆம் திகதி வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவிற்கும் சீனி இறக்குமதியாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நுகர்வோர் அதிகார சபையினால் அறிவிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையான 275 ரூபாவிற்கு சீனியை விற்பனை செய்வதன் மூலம் 40 ரூபா நட்டம் ஏற்படும் என இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் ஒரு கிலோ சீனிக்கு 40 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் சீனிக்கான ஓடர்களை இரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டின் போது நாட்டில் சீனி தட்டுப்பாடு
இதனால் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டின் போது நாட்டில் சீனி தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
பதினைந்து நாட்களுக்கு மட்டுமே போதுமானது
தற்போது சீனி இறக்குமதியாளர்களிடம் முப்பதாயிரம் மெற்றிக் தொன் சீனி மாத்திரமே இருப்பதாகவும், நாளாந்த சீனியின் தேவை சுமார் 2000 மெற்றிக் தொன் எனவும், தற்போது கையிருப்பில் உள்ள சீனி பதினைந்து நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும் இறக்குமதியாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
நிதி அமைச்சு அண்மையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு ஒரு கிலோகிராம் சீனிக்கான 25 சத வரியை 50 ரூபாவாக உயர்த்தியதுடன், அப்போது 250 ரூபாவாக இருந்த சீனியின் மொத்த விலை தற்போது 315 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.