விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: சர்வதேச நிதியத்தின் உதவியில் இலவச உரம்
40,000 ஏக்கர் மக்காச்சோளம் சாகுபடிக்கு இலவச உரம் வழங்கப்படுவதுடன் அதற்குத் தேவையான ஆரம்ப செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சோளம் பயிர்ச்செய்கைக்கான 8000 மெற்றிக் தொன் யூரியா உர விநியோகம் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் அம்பாந்தோட்டை சூரியவெவவில் ஆரம்பமானது.
மேலும், விவசாயிகளுக்கு டிஎஸ்பி (மண் உரம்) மற்றும் எம்ஓபி (கொத்து உரம்) ஆகியவற்றை இலவசமாக வழங்கவும் அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
நிதி ஒதுக்கீடு
விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் சிறிய அளவிலான விவசாய தொழில்முனைவோர் திட்டம் (SAPP) இந்த பருவத்தில் ஐந்து மாவட்டங்களில் 40,000 ஏக்கர் சோளத்தை பயிரிடும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
இதற்கு பங்களிக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை 23,000 என்பதோடு உலக வங்கியின் IFAD அல்லது விவசாய மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியம் இந்த திட்டத்திற்கான கடன் ஆதரவாக நிதி ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.