;
Athirady Tamil News

ஆட்சியாளர்களின் மனநிலை தான் நாட்டின் இந்த நிலைக்கு காரணம்: செல்வராசா கஜேந்திரன் காட்டம்

0

ஆசியாவிலேயே கேவலம் கேட்ட ஒரு நாடாக இலங்கை வந்திருக்கின்றதென்றால் ஆட்சியாளர்களின் மனநிலை தான் அதற்கு காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – மல்லாவி பகுதியில் நேற்று(11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

எங்களுடைய இனம் கிட்டத்தட்ட நாங்கள் படித்த வரலாறுகளின் படி 5000 வருடங்களாக அடிமைகளாக இருந்திருக்கின்றோம். இன்றும் அடிமைகளாக தான் இருக்கின்றோம், நாங்கள் எல்லோரும் கௌரவமான அடிமைகள்.

5000 வருடங்களுக்கும் முன்னர் வாழ்ந்ததாக சொல்லப்படுகின்ற ராவணன் எனும் சைவ தமிழ் மன்னனுடைய வரலாற்றை முற்றாக திரிபுபடுத்தி, எங்களை அழித்து அடிமைகளாக்கிய ஆரியர்கள், அவரை ஓர் அரக்கராகவும், அவருடன் சேர்ந்த அந்த அரச சபையை ஓர் அரக்கர் சபையாகவும் சித்தரித்து ராமாயணம் எனும் பெயரில் புனையப்பட்ட புத்தகங்களை எழுதி விற்று, அதை தமிழர்கள் நாங்களும் காலாகாலமாக வாசித்தும் வீடியோக்களை பார்த்தும், ராவணனை வணங்கி வந்த வரலாறுகளும் இருந்து வந்திருக்கின்றன.

கடந்த நான்கு, ஐந்து தசாப்தங்களுக்குள் தான் இந்த விழிப்புணர்வுகள் ஏற்பட்டு ராவணன் ஓர் தமிழ் மன்னன், ஆரியர்களினால் அவரின் சாம்ராஜ்ஜியம் அழிக்கப்பட்டது என்பதும், அவர் அரக்கராக சித்தரிக்கப்பட்டார் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இருட்டடிக்கப்பட்ட வரலாறு
அன்றைய கால கட்டத்தில் கடவுள் நம்பிக்கையோடு சேர்த்து அரக்கர்கள் என்று சொல்லப்பட்டது, இன்றைய நவீன காலகட்டத்தில் விடுதலை போராட்டம், நியாயமான உரிமை போராட்டம், அதுவும் ஒரு சமூகத்துக்காக குரல் கொடுக்கின்றவர்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு அழிக்கப்பட்ட வரலாறுகளும் இடம்பெற்றிருக்கின்றது.

அந்த வகையில் நீங்கள் அந்த இருட்டடிக்கப்பட்ட வரலாற்றை திருப்பி காட்டியிருக்கிறீர்கள்.

இருட்டடிக்கப்பட்ட எமது வரலாறுகளை மீண்டும் நேர் நிறுத்தி எமது இளைய சமுதாயத்திற்கு ஒரு நல்ல வழிகாட்டிகளாக நீங்கள் இருக்க வேண்டும்.

1960களில் இலங்கையை விட மிக மோசமான ஒரு பிச்சைக்கார நாடாக, ஒரு ஊழல் நிறைந்த நாடாக சிங்கப்பூர் இருந்தது, அந்த காலப்பகுதியில் அந்த நாடு சுதந்திரமடைகின்ற போது அந்த நாட்டின் தலைவர் தனது கன்னி உரையில், மிக விரைவில் சிங்கப்பூரை இலங்கை போன்ற ஒரு நாடாக கட்டி எழுப்புவேன் என்று தெரிவித்திருக்கின்றார்.

ஆனால் இன்று ஆசியாவிலேயே மிக கேவலம் கெட்ட ஒரு நாடாக இலங்கை வந்திருக்கின்றதென்றால் ஆட்சியாளர்களின் மனநிலை தான் அதற்கு காரணம்.

ஒரு காலத்தில் இலங்கை போன்று வரவேண்டும் என்று சிந்தித்த சிங்கப்பூர் இன்று உலகில் மிக முன்னேரிய ஒரு நாடாக இருக்கின்றது, இலங்கையில் படித்தவர்கள் நிறைய பேர் அந்தநாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள், ஆனால் இங்கே வாழமுடியாமல் நாங்கள் ஓடிக்கொண்டிருப்பதற்கு காரணம் இந்த நாட்டின் ஆட்சியாளர்களின் மனநிலைதான் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.