பெற்றோர்களை குறிவைத்து நூதனமான முறையில் பண மோசடி செய்யும் கும்பல்
பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளுக்கு கடுமையான சுகவீனம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பெற்றோர்கள் வைத்தியசாலை அல்லது பாடசாலைக்கு சென்ற பின்னர் வீடுகளில் கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதுவரை கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், குருநாகல் நகரிலுள்ள பல பாடசாலைகளிலும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பிள்ளையின் தந்தைக்கு, பாடசாலையின் பிரதி அதிபர் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
இதில் அவரது பிள்ளை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவசர சிகிச்சைக்கு பணம் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிள்ளையின் தந்தை ஒரு சட்டத்தரணி எனவும், அவர் பாடசாலைக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தபோது போது, அவரது குழந்தை நலமுடன் இருப்பதாகவும், வகுப்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த நபர் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதேபோல் குருநாகலில் உள்ள மற்றுமொரு முன்னணி ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரின் தந்தைக்கும் இவ்வாறான தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரின் எச்சரிப்பு செய்தி
தகவல் கிடைத்ததும் மாணவனின் தாத்தாவை பள்ளிக்கு அனுப்பி பிள்ளையின் உடல்நிலை குறித்து தெரிந்து கொண்டுள்ளார். பின்னரே அந்த அழைப்பு போலியானது என்பதை கண்டுபிடித்துள்ளார்.
இதேபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோசடி கும்பல் தொலைபேசிகளில் தெரிவிக்கும் செய்திகளை கண்டு ஏமாற்றமடைந்த சிலர் பதற்றமடைந்து தகவல் தேடாமல் பணத்தையும் கொடுத்துள்ளனர்.
மேலும் சில பெற்றோருக்குக் கிடைத்த தகவலைப் பற்றி விசாரிப்பதற்காக அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறியபின் அவர்களின் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த போலி தொலைபேசி அழைப்புகளுக்கு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், பதற்றம் அடையாமல் பாடசாலை நிர்வாகத்திடம் இருந்து விவரங்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.