தீபாவளியன்று மலையகத்தில் நேர்ந்த சோகம்
தீபாவளி பண்டிகையையொட்டி மதுபானம் கொண்டு வருவதற்கு சென்ற இருவர், பத்தனை ஆற்றில் விழுந்து காணாமல்போய் இருந்த நிலையில், அதில் ஒருவரின் சடலம் டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் இருந்து நேற்று (12) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திம்புள்ள பத்தனை காவல் பிரிவுக்குட்பட்ட கிரேக்லி தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி மோகன்ராஜ் (வயது 42) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவருடன் சென்ற அதே தோட்டத்தைச் சேர்ந்த பாலமாணிக்கம் பிரேம்குமார் (வயது 51) என்பவரே காணாமல் போயுள்ளார்.
இவர்கள் இருவரும் உறவினர்கள் எனவும், கடந்த 11 ஆம் திகதியன்று மாலை ஆறு மணியளவில் மதுபானம் வாங்கச் சென்றவர்கள்,திருப்பி வராததால் 12 ஆம் திகதி அவர்களது உறவினர்கள், காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
இந்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த இருவரில் ஒருவரின் சடலம் டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் இருந்து நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றவர் காணாமல் போயுள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக
இவர்கள் இருவரும் தாம் வசிக்கும் தோட்டத்திலிருந்து மதுபான சாலைக்கு செல்வதற்காக பத்தனை ஆறு ஊடாக உள்ள சிறிய அணையைக் கடக்க முற்பட்ட போது, இருவரும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் திம்புள்ள பத்தனை காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மீட்கப்பட்டுள்ள சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள, நிலையில் காணாமல்போனவரை தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.