;
Athirady Tamil News

வாழப் போராடிக்கொண்டிருந்த குழந்தையைக் கைவிட்ட பிரித்தானியா: செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது

0

ஒரு எட்டு மாதக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, அந்தக் குழந்தைக்கு இத்தாலி குடியுரிமை வழங்கியும், பிரித்தானியா அதைக்குறித்தெல்லாம் கவலைப்படாமல், மோசமான முடிவொன்றை எடுத்தது.

உயிருக்குப் போராடும் எட்டு மாதக்குழந்தை
பிரித்தானியக் குழந்தையான இண்டி (Indi Gregory) பிறந்து எட்டு மாதங்களே ஆகிறது. அவளுக்கு, ஒரு அபூர்வ மைட்டோக்காண்ட்ரியா நோய். அதாவது, அவளுடைய உடலிலுள்ள செல்களால் ஆற்றலை உற்பத்தி செய்ய முடியாது.

இங்கிலாந்திலுள்ள ஒரு மருத்துவமனையில் அவள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவளுக்கு கொடுக்கப்படும் சிகிச்சையால் இனி பயனில்லை, ஆகவே, அவளுக்கு கொடுக்கப்பட்டுவரும் செயற்கை சுவாசத்தை நிறுத்துவது என மருத்துவமனை முடிவு செய்தது.அதற்கு நீதிமன்றமும் அனுமதியளித்துவிட்டது.

குழந்தை இண்டியின் பெற்றோர், தங்கள் குழந்தையை இத்தாலியிலுள்ள Bambino Gesu மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்க பிரித்தானிய அரசிடம் அனுமதி கோரினார்கள்.

இத்தாலி எடுத்த அதிரடி நடவடிக்கை
இந்த தகவல் அறிந்த இத்தாலி பிரதமர், உடனடியாக குழந்தை இண்டிக்காகவே நாடாளுமன்றத்தைக் கூட்டினார். நாடாளுமன்றத்தில், குழந்தை இண்டிக்கு அவசர அவசரமாக இத்தாலியக் குடியுரிமை வழங்கப்பட்டது.

குட்டிக் குழந்தை இண்டி பிழைக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்று கூறுகிறார்கள். ஆனாலும், அவளுடைய உயிரைக் காப்பாற்ற கடைசி வரை என்னாலான முயற்சிகளைச் செய்வேன், அவளுடைய பெற்றோர் அவளுக்காக என்னென்ன செய்ய விரும்புகிறார்களோ, அதற்கும் உதவியாக இருப்பேன் என்று கூறினார், இத்தாலி பிரதமரான Giorgia Meloni.

பிரித்தானியா எடுத்துள்ள மோசமான முடிவு
ஆனால், அதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாத பிரித்தானியா, குழந்தையின் செயற்கை சுவாசத்தை நிறுத்தியே தீருவது என முடிவு செய்தது.

நேற்று, ஞாயிற்றுகிழமை, குழந்தை இண்டிக்கு அளிக்கப்பட்டுவந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டதாக, அவளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவந்த Christian Concern என்னும் தொண்டு நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் அருகிலிருக்க, இண்டியின் செயற்கை சுவாசக்கருவி அகற்றப்பட்ட நிலையில், நேற்று இரவு சுவாசிப்பதை நிறுத்திய இண்டி, மீண்டும் சுவாசிக்கத் துவங்கியுள்ளாள்.

அவள் கடுமையாகப் போராடிவருவதாக இண்டியின் தந்தை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், குழந்தை இண்டிக்காகவும், அவளது குடும்பத்தினருக்காகவும் தான் பிரார்த்தனை செய்துவருவதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.