விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது பாய்ந்த வழக்கு : எந்த ஊரில் எவ்வளவு பேர்?
அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, நாகை, கோவை, தேனி, மதுரை, நெல்லை என தமிழ்நாடு முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். தீபாவளி நாளில் பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கியது.
அந்தந்த மாநில அரசுகள் எந்த 2 மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்று நிர்ணயித்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தது. தமிழ்நாட்டில் காலை சூரிய உதயத்திற்கு முன் பலகார வகைகள், புத்தாடைகளை படையலிட்டு வழிபட்ட பிறகு நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, பட்டாசு வெடிப்பது வழக்கம். அதற்கு ஏற்ப காலை 6 மணி முதல் 7 மணி வரை பட்டாசுகளை வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. மேலும் வாணவேடிக்கைகள், இரவில் ஒளிரும் பட்டாசுகளுக்காக மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
எனினும் பட்டாசு வெடிப்பதில் ஆர்வம் கொண்ட சிறுவர்கள், இளைஞர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகளை சிதறவிட்டு உற்சாகத்தில் திளைத்தனர். இதனிடையே சென்னை காவல்துறை சார்பில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் குறித்து கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் காற்று மாசு, ஒலி மாசு போன்று விதிகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களை அடையாளம் கண்டு வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வாறு சென்னையில் மட்டும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 555 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதிக சத்தத்துடன் பட்டாசு வெடித்ததாக 19 வழக்குகளும், விதிகளை மீறி பட்டாசு கடை அமைத்து விற்பனை செய்தாக 7 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்
திருவள்ளூர் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாகவும், அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடித்ததாகவும் சுமார் 111 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை மாநகர் பகுதிகளில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக மாநகர காவல்துறையினர் 141 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 40 பேர் கைது செய்யப்பட்டு சொந்த பினையில் விடுக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை
விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக நெல்லை மாவட்டத்தில் 27 வழக்குகளும் நெல்லை மாநகரப் பகுதியில் 20 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விழுப்புரம்
வேலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தருமபுரி
தருமபுரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீது மாவட்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி
புதுச்சேரியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்த 56 பேர் மீது புதுச்சேரி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.