புலம் பெயர்ந்த இலங்கையரிடமிருந்து வந்து குவியும் டொலர்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 517.4 மில்லியன் டொலர்களை இந்த நாட்டிற்கு அனுப்பியதுடன், கடந்த மே மாதம் முதல் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பதவியேற்றதிலிருந்து 7.6 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டுப் பணமாகப் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் பெறப்பட்ட 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் ஒக்டோபர் மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 45.63 வீதமாக அதிகரித்துள்ளது.
அத்துடன், இவ்வருடத்தின் முதல் பத்து மாதங்களில் 4,862.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது 4.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணமாகப் பெறப்பட்டுள்ளன.
66 வீதம் அதிகரிப்பு
அதேவேளை, கடந்த வருடத்தின் முதல் பத்து மாதங்களில் 2,929.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே வெளிநாட்டுப் பணமாகப் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, கடந்த வருடத்தின் முதல் பத்து மாதங்களுடன் ஒப்பிடும் போது, இவ்வருடத்தின் முதல் பத்து மாதங்களில் வெளிநாட்டுப் பணம் பெறுவது 66 வீதத்தால் அதிகரித்துள்ளது.