வரவு செலவு திட்டம் : மொட்டு கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்த மகிந்த!
இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான எந்தவொரு தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த திட்டத்தை தமது கட்சி ஆராய்ந்ததன் பின்னர், இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவு திட்டம்
சிறிலங்கா அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை ஆராயாது அது தொடர்பான எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ள முடியாதென மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், முடியுமான அனைத்து சூழ்நிலைகளிலும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு தமது கட்சி ஆதரவு வழங்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஆதரவளிக்க முடியாத சூழ்நிலைகளில் அதற்கேற்ப கட்சி தீர்மானங்களை மேற்கொள்ளுமென அவர் கூறியுள்ளார்.
அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு
மேலும், வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவாக வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது அடுத்த ஒக்டோபர் மாதம் வழங்கப்படுமா என ஊடகவியாளலர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச, எதுவும் இல்லாமல் இருப்பதற்கு எப்போதவது கிடைக்குமாயின் அது நல்லதே எனவும் பதிலளித்துள்ளார்.