மக்களுக்கு நிவாரணம் வழங்காத அரசாங்கம் : குற்றம் சாட்டும் ஜீ. எல். பீரிஸ்
இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படவில்லை என சுதந்திர மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று (13) முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு
இலங்கையில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை குறித்த சலுகை வழங்கப்படாதென ஜீ. எல். பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஓய்வூதியதாரர்களுக்கான 2 ஆயிரத்து 500 ரூபாவும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை வழங்கப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெறுமதி சேர் வரி
வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு முன்னதாக பெறுமதி சேர் வரியை அதிகரிக்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்த காரணத்தால், மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் அதிகளவான மின் பாவனையாளர்களின் விநியோகம் தற்போது துண்டிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய ஜீ. எல். பீரிஸ் இவ்வாறான மக்கள் பிரச்சினைகளுக்கு வரவு செலவு திட்டத்தின் ஊடாக தீர்வுகள் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.