கேரளாவை உலுக்கிய 5 வயதுச் சிறுமி வன்கொடுமை; குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை
கேரளாவில் நபரொருவர் 5 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து குப்பைக் கிடங்கில் வீசிய கொடூர சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் சந்தேக நபருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆலுவா மாவட்டம் முக்கம் பகுதியில் வசித்து வந்த பீகார் மாநில தம்பதியின் மகளே இவ்வாறு கொலைசெய்யப்பட்டிருந்தார். கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி குறித்த சிறுமி காணாமற்போனதாக அவரது பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புலம்பெயர் தொழிலாளி
இந்நிலையில் பொலிஸாரின் விசாரணையில், குறித்த பகுதியில் வசித்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி அஸ்பக் ஆலம் என்பவரே இக்கொடூரத்தை புரிந்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.
இச் சம்பவம் இந்தியா முழுவரும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது குறித்த வழக்கானது கடந்த 110 நாட்களாக எர்ணாகுளம்நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.
இந் நிலையில், இன்று குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையையும், 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.