;
Athirady Tamil News

காசாவில் பெரும் அவலம் : மருத்துவமனை வளாகத்தில் புதைக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட சடலங்கள்

0

காசாவின் அல் ஷிபா மருத்துவமனையில் உயிரிழந்த பிஞ்சு குழந்தைகள் உட்டபட 170 பாலஸ்தீனியர்களின் உடல்கள் அந்த மருத்துவமனையின் வளாகத்திலேயே ஒன்றாக புதைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 4 நாட்களுக்கும் மேலாக உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைக்கவோ அல்லது அணுகவோ இஸ்ரேல் இராணுவம் தடுத்த நிலையில் சடலங்கள் சிதைந்து, தெருநாய்களால் சிதைக்கப்பட்டன.

இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் பலியானவர்கள்
இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானவர்கள் என பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.

பொதுமக்கள்,மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவமனை தொண்டர்கள் இணைந்து மருத்துவமனை வளாகத்தில் பாரிய குழியை வெட்டி இந்த சடலங்களை புதைத்ததாக அந்த பத்திரிகையாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை காசா நகரில் உள்ள அல்-ஹிலு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களையும் இஸ்ரேலிய டாங்கிகள் சுற்றி வளைத்துள்ளன.

செயலிழந்தது மின்பிறப்பாக்கி
அதேபோன்று காசா பகுதிக்கு தெற்கே உள்ள கான் யூனிஸில் உள்ள பாலஸ்தீனிய ரெட் கிரசென்ட் சொசைட்டியுடன் இணைந்த அல்-அமல் மருத்துவமனையில் உள்ள ஒரே மின்பிறப்பாக்கியும் திங்களன்று செயல் இழந்தது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 90 நோயாளிகள், மருத்துவ புனர்வாழ்வு பிரிவில் உள்ள 25 நோயாளிகள் உட்பட, 9,000 இடம்பெயர்ந்த மக்கள் சங்கத்தின் தலைமையகம் மற்றும் மருத்துவமனையில் தஞ்சம் புகுந்துள்ளதோடு, எந்த நேரத்திலும் உயிரிழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை
பாலஸ்தீனிய சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இஸ்ரேல் இதுவரை 4,609 குழந்தைகள் மற்றும் 3,100 பெண்கள் உட்பட 11,360 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,200ஐ எட்டியுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதி முழுவதும் பொதுமக்களின் வீடுகளைத் தொடர்ந்து தாக்கி வருகிறது, முற்றுகையிடப்பட்ட எல்லா இடங்களிலும் புதிய படுகொலைகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.