அமெரிக்காவின் கருத்து காஸா மருத்துவமனை மீது படுகொலைகளை தூண்டவே வழிவகுக்கும்: ஹமாஸ் எச்சரிக்கை
ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பினர் காஸாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து இயங்குவதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்காவின் கருத்து ஆபத்தை விதைக்கும் என்று ஹமாஸ் எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் மீது அழுத்தம்
அமெரிக்கா குறிப்பிடுகையில், ஹமாஸ் படைகள் அங்கு ஆயுதங்களை சேமித்து வைத்துள்ளனர். அந்த மருத்துவமனைக்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க அவர்கள் தயாராக உள்ளனர் எனவும் பென்டகன் துணை செய்தி செயலாளர் சப்ரினா சிங் தெரிவித்தார்.
அல்-ஷிஃபா மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டுள்ளது தொடர்பாக இஸ்ரேல் மீது அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
ஆனால் அல்-ஷிஃபா மருத்துவர்கள் தெரிவிக்கையில், நோயாளிகள் மற்றும் தஞ்சம் தேடும் மக்கள் பயங்கரமான சூழ்நிலையில் சிக்கித் தவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
அப்பாவி மக்கள்
சப்ரினா சிங் மேலும் தெரிவிக்கையில், பாலஸ்தீனிய போராளிக் குழுக்கள் காஸாவில் உள்ள மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகளை தங்கள் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் பணயக்கைதிகளை வைத்திருப்பதற்கும் ஒரு மறையாக பயன்படுத்துவதாக அமெரிக்காவிற்கு தகவல் கிடைத்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா ஒருபோதும் முடிவெடுக்காது எனவும் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, அல்-ஷிஃபா மருத்துவமனையில் நோயாளிகள், ஊழியர்கள் மற்றும் தஞ்சம் தேடியுள்ள அப்பாவி மக்கள் என சுமார் 2,300 பேர்கள் சிக்கியிருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கையில், ஹமாஸ் படைகளை ஒழிப்பதே இலக்கு, மருத்துவமனைகள் எங்கள் இலக்கல்ல என விளக்கமளித்துள்ளனர். இதனிடையே, அமெரிக்காவின் கருத்து காஸாவில் மேலும் படுகொலைகளை தூண்டும் நடவடிக்கை என ஹமாஸ் படைகள் கருத்து தெரிவித்துள்ளது.