வடக்கில் முன்னெடுக்கப்படும் சிறுவர் செயற்திட்டங்களை உதவ கோரிக்கை
சிறுவர்களின் திறன் மேம்பாடு , பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற செயற்திட்டங்களுக்கு உதவ வேண்டும் என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளிடம் வடமாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளுக்கும், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்பாணத்திலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Christian Skoog, உதவி பிரதிநிதி Begona Arellano, கல்வி உத்தியோகத்தர் உள்ளிட்ட குழாத்தினர் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.
அதன் போது, மாணவர்களின் கற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படும் விதம், சிறுவர்களுக்கான திறன் மேம்பாட்டு செயற்பாடுகள், சிறுவர் துஷ்பிரயோகம், சட்டவிரோத செயற்பாடுகள், பெற்றோர்களுக்கு வழங்கப்பட வேண்டிய விழிப்புணர்வு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆளுநரால், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளுக்கு கூறப்பட்டது.
அத்துடன், பாடசாலை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், அதிகாலை தொடக்கம், இரவு வரை நடைபெறுகிறது. மாணவர்கள் பிரத்தியேக வகுப்புகளில் தங்கவைக்கபடுவதால் , மாணவர்களின் திறன் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நேரம் ஒதுக்கப்படுவதில்லை
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சையின் பின்னர் மாணவர்களின் நிலைப்பாடு கவலைக்கிடமாக காணப்படுவதாகவும், இந்த நிலையை மாற்றி அமைப்பதற்கு தேவையான ஆலோசனைகள் , வழிகாட்டல்கள் வழங்கப்படுதில்லை.
பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுப்பதற்கான செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு தேவையான விழிப்புணர்வு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என தெரிவித்த ஆளுநர் ,ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளிடம் அதற்காக செயற்திட்டங்களுக்கு உதவ கோரிக்கை விடுத்தார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஐ.நா சிறுவர் நிதியம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும், வட மாகாண ஆளுனரால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Christian Skoog இதன்போது கூறினார்.