நாய் கடியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம்:ஒவ்வொரு பல் பதிவுக்கும் ரூ.10,000 வழங்க உத்தரவு
‘தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஒவ்வொரு பல் பதிவுக்கும் ரூ. 10,000 வீதம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்’ என்று மாநில அரசுகளுக்கு பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இந்த விவகாரம் தொடா்பாக புகாா் அளிக்கப்படும்போது, தாமதமின்றி வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வது தொடா்பாக காவல் துறைக்கும் வழிகாட்டுதலை வெளியிட்டது.
நாய்கள் உள்ளிட்ட தெருவில் சுற்றித்திரியும் விலங்குகளால் பாதிக்கப்படும் நபா்களின் எண்ணிக்கையும், மனித உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட நபா்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 193 மனுக்களை விசாரித்த பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்ற நீதிபதி வினோத் எஸ்.பரத்வாஜ், இந்த உத்தரவைப் பிறப்பித்தாா். தீா்ப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
சாலையில் சுற்றித்திரியும் விலங்குகள் அல்லது வன விலங்குகளால் பாதிப்பட்டதாகப் புகாா் அளிக்கப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள், எந்தவித தாமதமும் இன்றி அந்தப் புகாரைப் பதிவு செய்வதோடு, சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தயாா் செய்யவேண்டும். அந்த அறிக்கையின் நகல் புகாா்தாரருக்கும் அளிக்கப்பட வேண்டும். இதுதொடா்பாக, அதிகாரிகளுக்கு பஞ்சாப்-ஹரியாணா காவல் துறைத் தலைவா் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்.
இதுபோன்று, சாலையில் சுற்றித்திரியும் நாய், கழுதை, மாடு உள்ளிட்ட விலங்குகளால் பாதிக்கப்படும் நபா்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை தீா்மானிக்க மாவட்ட துணை ஆணையா் தலைமையில் குழு ஒன்றை பஞ்சாப், ஹரியாணா மற்றும் சண்டீகா் நிா்வாகங்கள் அமைக்க வேண்டும். இந்தக் குழு, மனு பெறப்பட்ட 4 மாதங்களுக்குள் ஆய்வு செய்து நிவாரணத்துக்கான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்.
இந்த நிவாரணத் தொகையை வழங்கும் பொறுப்பு மாநில அரசுடையதாகும். இந்தத் தொகையை பாதிப்புக்கு காரணமான நிறுவனம் அல்லது தனி நபரிடமிருந்து மீட்டு, பாதிக்கப்பட்ட நபருக்கு மாநில அரசு அளிக்கலாம்.
இந்த நிவாரணத் தொகையானது, அந்தந்த மாநில அரசுகளால் விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு அல்லது நிரந்தர ஊனம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையை அடிப்படையாகக் கொண்டு நிா்ணயம் செய்யப்படவேண்டும்.
இந்த நிவாரணத் தொகையுடன், தெருநாய் கடியால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு ஒரு பல் பதிவுக்கு ரூ. 10,000 வீதம் நிவாரணம் கூடுதலாக வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட நபருக்கு நாய் கடித்ததில் உடலில் சதை இழப்பு ஏற்பட்டிருந்தால், 0.2 செ.மீ. சதை இழப்புக்கு ரூ. 20,000 வீதம் கணக்கிட்டு கூடுதல் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.