களுத்துறையில் கடத்தப்பட்ட இரு மாணவிகளும் மீட்பு!
களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் நேற்று (2023.11.15) பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவிகள் இருவர் கடத்தப்பட்ட நிலையில் களுத்துறை தெற்கு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் மாணவிகளைப் பலவந்தமாக வாகனத்தில் கடத்திச் சென்ற நிலையில் அதனைக் கண்ட ஒருவர் மாணவிகளை காப்பாற்ற முற்பட்டபோது சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் விசாரணை
இச்சம்பவம் குறித்து பாடசாலை அதிபருக்கு தகவல் கிடைத்ததன் பிரகாரம் அவர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து களுத்துறை தெற்கு பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில், இரு மாணவிகளும் நேற்று களுத்துறை பொலிஸ் கல்லூரிக்கு அருகில் கைவிடப்பட்டு காணப்பட்ட நிலையில் பொலிஸாரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதே பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவரே இரு மாணவிகளையும் கடத்திச் சென்றதாகவும் பின்னர் இரு மாணவிகளையும் கிதுலாவ மெனேரிதன்ன பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த பெண் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மாணவிகள் தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் வீட்டின் உரிமையாளரும், மாணவிகளை கடத்திச் சென்ற முச்சக்கரவண்டியின் சாரதியும் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தலை திட்டமிட்ட பாடசாலை மாணவன் முச்சக்கர வண்டியில் வந்த இரு மாணவிகளை தாக்கியுள்ளார். இந்த இரு மாணவிகளும் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் பெண் ஒருவர் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். தலைமறைவாகியுள்ள 16 வயதுடைய பாடசாலை மாணவனைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.