மில்லியன்கணக்கான வேலையற்ற பிரித்தானியர்கள் அரசு உதவிகளை இழக்க நேரிடும்: நிதியமைச்சர் எச்சரிக்கை
மில்லியன்கணக்கான வேலையற்ற பிரித்தானியர்கள் கடுமையான புதிய திட்டங்களின் கீழ் அரசு உதவிகளை இழக்க நேரிடும் என நிதியமைச்சர் எச்சரித்துள்ளார்.
வேலைத் தேடிக்கொள்ள மறுத்தால்
உடல் மற்றும் கல்வி தகுதி கொண்ட பிரித்தானியர்கள் வேலைத் தேடிக்கொள்ள மறுத்தால், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் எச்சரித்துள்ளார்.
வரி செலுத்தும் பிரித்தானியர்களை இனி ஏமாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடினமாக உழைக்கும் வரி செலுத்துவோருக்கு நியாயமளிக்க வேண்டும் என்றும் வேலைவாய்ப்பை கைவிடும் எவரும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் தற்போது 2.6 மில்லியன் மக்கள், வேலைவாய்ப்பை கைவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அந்த நபர்களை மீண்டும் வேலைக்கு அனுப்பும் திட்டத்தை வகுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
விளைவுகளை சந்திக்க நேரிடும்
நமது பொருளாதாரத்தை வளர்ப்பதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம், அதாவது வேலை தேடாதவர்களின் அதிகரிப்புக்கு நாம் தீர்வு காண வேண்டும் என்றார்.
கிட்டத்தட்ட ஒரு மில்லியன் காலியிடங்களுக்கு வாய்ப்புகள் உள்ளன என குறிப்பிட்டுள்ள அவர், மக்கள் வேலை தேடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.
வேலை தேட மறுப்பவர்கள் இனி விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ஜெர்மி ஹன்ட் எச்சரித்துள்ளார். அத்துடன், வரி செலுத்துவோரின் கடின உழைப்பில் வாழ முடிவு செய்துள்ள எவரும் தங்கள் அனுபவிக்கும் பலன்களை இழக்க நேரிடும் என்றார்.