கழிவு நீரை எரிபொருளாக மாற்றும் சாதனம்; வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு – எப்புட்றா..?
கழிவு நீரை எரிபொருளாக மாற்றும் சாதனத்தை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
மிதக்கும் செயற்கை இலை
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், அசுத்தமான நீர் அல்லது கடல்நீரை ஹைட்ரஜன் எரிபொருளாகவும், சுத்திகரிக்கப்பட்ட நீராகவும் மாற்றக்கூடிய புதிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.
தாவரங்கள் சூரிய ஒளியை உணவாக மாற்றும் ஒளிச்சேர்க்கையின் அடிப்படையில் இந்த சாதனத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இது ‘மிதக்கும் செயற்கை இலை’ என்று அழைக்கப்படுகிறது.
மேலும், இந்த சாதனமானது சூரிய ஒளியால் இயங்குகிறது. அடிப்படை வளங்கள் இல்லாத பகுதிகள் மற்றும் தொலைதூர பகுதிகளுக்கு பயனுள்ளதாக இந்த எளிய சாதனம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரச்சினைகளுக்கு தீர்வு
மேலும், சுத்தமான எரிபொருள் மற்றும் நீர் கிடைப்பதற்கான தீர்வுகளுக்கு இது ஒரு உதாரணமாக அமையும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதற்கு முன்பு இதேபோன்ற ஒரு சாதனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டிபிடித்திருந்தனர்.
அந்த சாதனத்திற்கு சுத்தமான நீர் ஆதாரங்கள் தேவை. ஆனால் இப்போது கண்டுபிடித்துள்ள புதிய சாதனத்தை அசுத்தமான தண்ணீரில் பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் அந்த தண்ணீரை சுத்திகரித்து சுத்தமான குடிநீரை உற்பத்தி செய்ய முடியும். எனவே, இந்த ஒரு சாதனம் ஒரே நேரத்தில் இரண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.