சுற்றுலா விசாவில் தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை பெண் கைது
சுற்றுலா விசாவில் காதல் கணவருடன் வாழ்வதற்காக தமிழகத்திற்கு வந்து தஞ்சமடைந்த இலங்கை பெண்ணை தமிழ் நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழக மாவட்டம், கடலூரில் உள்ள விருத்தாசலம் வட்டம், டி.வி.புத்தூா் கிராமத்தில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் வசித்து வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் கருவேப்பிலங்குறிச்சி பொலிஸார் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்த போது இலங்கையைச் சேர்ந்த புஷ்பலீலா(37) என்ற பெண் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
பொலிஸ் விசாரணை
இதனால், புஷபலீலாவை பொலிஸ் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதன் போது, அவர் சுற்றுலா விசாவில் தமிழகத்தில் வசித்து வருகின்றமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, துபாயில் புஷ்பலீலா வேலை செய்தபோது, டி.வி.புத்தூா் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமாருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் 2013ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்து திருமணம் செய்து கொண்டனர். பின்பு, இருவரும் துபாய் சென்று வாழ்ந்துள்ளனர்.
இதில், விசா காலம் முடிந்ததும் செந்தில்குமார் தமிழ்நாட்டிற்கு திரும்பியுள்ளார். இதனால், கணவரை பிரிந்து இருக்க முடியாத புஷ்பலீலா 2019ஆம் ஆண்டு சுற்றுலா விசா மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்து இங்கேயே தங்கியுள்ளார்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில், புஷ்பலீலாவை பொலிஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.