உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து: தொழிலாளா்களை மீட்க 24 மீட்டா் தூரத்துக்கு துளையிடும் பணிகள் நிறைவு
உத்தரகண்டில் மலை சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளா்களை மீட்க தில்லியிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்திய விமானப் படையின் கனரக இயந்திரம் மூலம் வெள்ளிக்கிழமை காலை வரையில் 24 மீட்டா் தூரத்துக்கு துளையிடப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்தப் பாதையின் ஒரு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் 40 தொழிலாளா்கள் சுரங்கத்தின் நடுவில் சிக்கிக் கொண்டனா். அவா்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பேரிடா் மீட்புக் குழுவினா் ஈடுபட்டு வருகின்றனா்.
இடிபாடுகளில் துளையிட்டு தொழிலாளா்களை மீட்க, இந்திய விமானப் படையின் ‘சி-130 ஹொ்குலிஸ்’ விமானம் மூலம் கனரக இயந்திரம் விபத்துப் பகுதிக்கு கடந்த புதன்கிழமை கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, துளையிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
தொழிலாளா்களை மீட்க 80 செ.மீ. மற்றும் 90 செ.மீ. விட்டம் கொண்ட இரும்பு குழாய்கள் ஒன்றன்பின் ஒன்றாக செலுத்த 60 மீட்டா் தூரம் வரை துளையிடப்பட வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் கட்டுமான நிறுவன இயக்குநா் அன்ஷுல் மனீஷ் தெரிவித்திருந்தாா். அவ்வாறு வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, 24 மீட்டா் தூரத்துக்கு துளையிடப்பட்டுள்ளது என மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
சில்க்யாரா மாவட்ட ஆட்சியா் அபிஷேக் ரூயேலா கூறுகையில், ‘சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளா்கள் பாதுகாப்பாக உள்ளனா். அவா்களுக்கு வேண்டிய ஆக்ஸிஜன், மருந்து, உணவு, குடிநீா் ஆகியவை குழாய் மூலம் அனுப்பப்படுகிறது. மன உறுதியை ஊக்குவிக்க அவா்களுடன் தொடா்ந்து தொடா்பில் இருக்கிறோம்’ என்றாா்.
இந்த நிலையில், ம.பி. மாநிலம் இந்தூரிலிருந்து விமானப் படையின் சி17 விமானம் மூலமாக துளையிடும் மற்றொரு இயந்திரம் டேராடூன் கொண்டு வரப்பட்டு மீட்புப் பணி நடைபெறும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஜாா்க்கண்ட் குழு விசாரணை:
சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள ஜாா்க்கண்ட் மாநிலத் தொழிலாளா்களான விஸ்வஜித் மற்றும் சுபோத் ஆகிய 2 பேரின் நிலைக் குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி புவனேஷ் பிரதாப் சிங் தலைமையில் 3 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த இக்குழு, பாதிக்கப்பட்ட 2 தொழிலாளா்களிடம் உரையாடினா். இதைத் தொடா்ந்து தொழிலாளா்களின் நலனுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக பிரதாப் சிங் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.