நகைச் சீட்டு மூலம் ரூ.100 கோடி மோசடி செய்த உரிமையாளர்.., இரவோடு இரவாக தப்பியோட்டம்
தமிழக மாவட்டம், சேலத்தில் நகைச்சீட்டு நடத்தி ரூ.100 கோடி வரை மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ரூ.100 கோடி மோசடி
சேலம் மாவட்டம், வலசையூர் பகுதியை சேர்ந்த சபரி என்பவர் எஸ்.வி.எஸ் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல இடங்களிலும் கிளைகள் வைத்துள்ளார்.
இந்நிலையில், நகைச் சீட்டு மூலம் சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது. இதனால், சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
நகைக்கடை உரிமையாளர் ஓட்டம்
இதனிடையே, நகைக்கடை உரிமையாளர் இரவோடு இரவாக தப்பிச்செல்லும் வீடியோ வெளியானது. இதனால், பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் அதிர்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும், நகைக்கடை ஊழியர்கள் எட்டு பேரை பிடித்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக காவல்துறையிடம் ஒப்படைத்து எங்களுடைய பணத்தை மீட்டு தர வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.
அதுமட்டுமல்லாமல், நகைக்கடை உரிமையாளரை கைது செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.