முக்கிய பாலம் தகா்ப்பு: சூடான் ராணுவம், ஆா்எஸ்எஃப் பரஸ்பர குற்றச்சாட்டு
சூடானின் முக்கியத்துவம் வாய்ந்த ஜபேல் ஆவ்லியா அணைப் பாலத்தைத் தகா்த்ததாக அந்த நாட்டு ராணுவமும், ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படையும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டியுள்ளன.
தலைநகா் காா்ட்டூமுக்கு தெற்கே அமைந்துள்ள அந்த அணை, வெள்ளை நைல் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. அந்த அணையின் பாலம் தற்போது தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறது.சூடானில் ராணுவத்துக்கும், ஆா்எஸ்ஃப் படையினருக்கும் கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வரும் சண்டையில் தகா்க்கப்பட்ட முக்கியக் கட்டமைப்புகளில் இந்தப் பாலமும் ஒன்றாகியுள்ளது.பாலம் தகா்க்கப்பட்டதைத் தொடா்ந்து, ஜபேல் ஆவ்லியா அணைக்கு அருகே வசித்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அங்கிருந்து வெளியேறியுள்ளனா்.வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில், இதுவரை 9 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் போ் வரை உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சா்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை.