;
Athirady Tamil News

பிரதேச சபையின் அசமந்த போக்கினால் இரவில் பயணிக்க முடியாது ஆபத்தான பிரதேசமாக மாறிவரும் மாவடிப்பள்ளி !

0

அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட காரைதீவு- அம்பாறை பிரதான வீதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மாவடிப்பள்ளி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு காரைதீவு பிரதேச சபை நிர்வாகத்தின் கீழுள்ள தெருவிளக்குகள் பிந்திய இரவுகளில் மின்துடிப்பை மேற்கொள்வதால் இருள் சூழ்ந்து பொதுமக்களும், பாதசாரிகளும் வீதியில் அச்சமின்றி பயணிக்க முடியாது பலத்த அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர்.

இது தொடர்பில் பல தடவைகள் ஊடகங்களின் வாயிலாக செய்திகள் வழங்கப்பட்டிருந்த போது நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறி நிரந்தர ஆக்கபூர்வமான எவ்வித செயற்பாடுகளையும் காரைதீவு பிரதேச சபை மேற்கொள்ளாத நிலையில் தொடர்ந்தும் யானைகளின் நடமாட்டம், முதலைகளின் கரையொதுங்குதல், கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் என மாவடிப்பள்ளி பிரதேசம் இரவில் பயணிக்க முடியாதவாறு ஆபத்தான பிரதேசமாக காட்சியளிக்கிறது.

அது மாத்திரமின்றி இருள் சூழ்ந்துள்ளமையால் குறித்த பிரதேசத்தில் பல சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சம் வெளியிடுகின்றனர். ஆகவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காரைதீவு பிரதேச சபை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட காரைதீவு, மாவடிப்பள்ளி பிரதான வீதியின் ஒரு பகுதி தெரு மின் விளக்குகள் அதாவது மாவடிப்பள்ளி பெரிய பாலம் தொடக்கம் மாவடிப்பள்ளி வரை எரியாமல் உள்ளது. ஆனால் காரைதீவு பிரதேசத்தில் மின் விளக்குகள் எரிகிறது. இது எவ்வகையான திட்டம் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மாவடிப்பள்ளி பிரதேச மின் விளக்குகளை மீள எரியச் செய்வதற்கான எந்த நடவடிக்கைகளும் காரைதீவு பிரதேச சபையால் இதுவரை மேற் கொள்ளாமல் இருப்பதை இட்டு மாவடிப்பள்ளி மக்கள் ஆதங்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

இதனை கருத்திற் கொண்டு காரைதீவு பிரதேச சபை உட்பட உரிய அரச நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவடிப்பள்ளி மக்கள் மற்றும் பொது மக்கள் சார்பாக அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா, மாவடிப்பள்ளி மொழிச் அபிவிருத்தி மற்றும் சகவாழ்வுச் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புக்கள் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.