கடும் கோபத்தில் மகிந்த
நாட்டை வங்குரோத்து அடையச் செய்தது ராஜபக்சர்கள் அல்லவென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அன்றைய நல்லாட்சிக்கு பங்காற்றிய தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும் என மகிந்த ராஜபக்ச சாடியுள்ளார்.
2015ஆம் ஆண்டு தேர்தலில் தான் தோல்வியடைந்தபோது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருந்தது. ஆனால் நல்லாட்சியின் பின்னர் 2020 ஆம் ஆண்டு மீண்டும் நாட்டைக் கைப்பற்றிய போது பொருளாதார வளர்ச்சி வீதத்தை 2 சதவீதமாக குறைத்தது.
இதற்கு காரணம் ராஜபக்சர்களா என ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவர்களிடம் கேள்வி எழுப்புவேன் என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
வரிகளைக் குறைப்பதாக உறுதியளித்தது
நீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் மிகவும் மதிப்பதாகத் தெரிவித்த மகிந்த ராஜபக்ச, 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் தனது கட்சி விஞ்ஞாபனத்தில் வரிகளைக் குறைப்பதாக உறுதியளித்தது.
தமக்கு வழங்கப்பட்ட ஆணையின்படி செயற்பட்டு வரிகளை குறைப்பது எவ்வாறு பிழையானது என கேள்வி எழுப்புவதாகவும் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கொள்கை முடிவினால் தான் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றதாகவும் அவர்களின் வேலைத்திட்டத்தில் இணையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வற் உள்ளிட்ட வரி குறைப்புக்கு எதிராக நீதிமன்றம் சென்ற கல்விமான்கள் நாணய நிதியத்தின் பரிந்துரைகளின் பேரில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நெடுஞ்சாலையில் ஊர்வலம் நடந்தமை வேடிக்கையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.