பொலிஸ்மா அதிபருக்கு சேவை நீடிப்பு: அரசமைப்புக் கவுன்ஸிலுக்குள் முரண்பாடு
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு, சேவை நீடிப்பு வழங்கும் விவகாரத்தில் அரசமைப்பு கவுன்ஸிலுக்குள் பல்வேறு முரண்பாடுகள் எழுந்துள்ளன என்று தெரியவருகின்றது.
இந்த விவகாரத்தில் அரசமைப்புக் கவுன்ஸில் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.
கவுன்ஸிலின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் சி.டி.விக்ரமரத்ன, மீண்டும் மீண்டும் அரசமைப்புக் கவுன்ஸிலின் ஒப்புதலின்றி, பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவதற்குக் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கும் இடையிலும் பல்வேறு கருத்து முரண்பாடுகள் இந்த விடயத்தில் தோன்றியுள்ளன.
டிரான் அலஸின் கோரிக்கை
அதன் காரணமாகவே இந்த வருடம் மார்ச் மாதம் முதல் புதிய பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனைப் புதிய பொலிஸ்மா அதிபராக நியமிக்க அமைச்சர் டிரான் அலஸ் ஜனாதிபதியிடம் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்துள்ளார் எனவும், அதனை ஜனாதிபதி நிராகரித்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.
சி.டி.விக்ரமரத்ன பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் நான்கு முறை அவருக்குச் வேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 3ஆம் திகதி மூன்று வாரங்களுக்குக் கடைசியாக அவருக்குச் சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டது.
எவ்வாறாயினும், நேற்றுக் கூடிய அரசமைப்புப் கவுன்ஸிலால் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட சேவை நீடிப்புக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை.
சேவை நீடிப்புக்கு எதிர்ப்பு
மூன்று சிவில் சமூக உறுப்பினர்களும், இன்னும் சிலரும் சேவை நீடிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக, இறுதி முடிவு எடுக்க இரண்டாவது முறையாக நேற்றுக் கவுன்ஸில் மீளவும் கூடவிருந்தது.
மேலும், ஜனாதிபதியால் வழங்கப்பட்ட சேவை நீடிப்பு அரசமைமைப்புக் கவுன்ஸிலின் ஒப்புதல் இல்லாமல் செல்லுபடியாகுமா அல்லது அரசமைப்பின் அடிப்படையில் செல்லுபடியாகுமா என்பதில் சட்டத் தெளிவில்லாத சூழலும் காணப்படுகின்றது.
அரசமைப்புக் கவுன்ஸில் பத்து உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம், கலாநிதி பிரதாப் ராமானுஜம், கலாநிதி தில்குஷி அனுலா விஜேசுந்தரே, கலாநிதி தினேஷா சமரரத்ன ஆகியோர் இதன் உறுப்பினர்களாவர்.
ஓர் உறுப்பினருக்கான பதவி இன்னமும் வெற்றிடமாக உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.