;
Athirady Tamil News

யாழ். பொன்னாலையில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்: பொலிஸார் மீது வலுக்கும் சந்தேகம்

0

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை சந்தியில் இருந்து 100 மீற்றர்கள் தூரத்தில் உள்ள புதர் ஒன்றினுள் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்றையதினம் (18.11.2023) மீட்க்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் ஆனைக்கோட்டை – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சேகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 14ஆம் திகதி பொன்னாலை கிராம சேவகர் அலுவலகத்தை சேதப்படுத்தும் விதத்தில் செயற்படுகின்றார் என ஊர் மக்கள் கிராம சேவகருக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

பொலிஸார் மீது சந்தேகம்
இதன்போது கூட்டம் ஒன்றில் இருந்த கிராம சேவகர் பொலிஸாருக்கு இது குறித்து தெரியப்படுத்தினார். இந்நிலையில் பொலிஸார், தாங்கள் அவரை அழைத்துச் சென்றதாக கிராம சேவகருக்கு உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்றையதினம் (18.11.2023) ஊடகவியலாளர் ஒருவர் குறித்த பகுதிக்கு சென்று சடலத்தை புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தவேளை, அவரை காணொளி மற்றும் புகைப்படம் எடுக்க வேண்டாம் என பொலிஸார் மிரட்டும் தொனியில் தடுத்தனர்.

குறித்த ஊடகவியலாளர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, கடந்த 14ஆம் திகதி பொன்னாலை கிராம சேவகரின் அறிவித்தலின் பேரில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை பொலிஸ் நிலையம் அழைத்து சென்றீர்களா? அவ்வாறு அழைத்துச் சென்றால் அவர் எங்கே? என வினவினார்.

அதற்கு “அது தொடர்பாக எதுவும் தெரியவில்லை” என குறித்த ஊடகவியலாளருக்கு பதில் வழங்கப்பட்டது.

அவரை தாங்கள் அழைத்துச் சென்றதாக கிராம சேவகருக்கு கூறிய பொலிஸார், அவரை பற்றி தெரியாது என ஊடகவியலாளருக்கு கூறியது, ஊடகவியலாளரை புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க விடாது தடுத்தது போன்ற விடயங்கள் வட்டுக்கோட்டை பொலிஸார் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு மல்லாகம் நீதிமன்ற நீதிவான், சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டவர்கள் வந்து பார்வையிட்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.