பலஸ்தீனத்தை இரு நாடுகளாகப் பிரிப்பதே சிக்கலுக்கு தீர்வு : அமெரிக்க அதிபர் யோசனை
போர் நிறைவடைந்ததும், பலஸ்தீனம் இரு நாடுகளாக பிரிக்கப்படுவது தான் இஸ்ரேல் – ஹமாஸ் சிக்கலுக்கு தீர்வு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபல பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துக்களை பகிர்ந்த அவர்,
அமைதிக்கான வழி
“போர் நிறுத்தம் வேண்டும் எனப் பலர் கூறி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினர் பயங்கரவாத சித்தாந்தத்தை கடைபிடித்து வருவதை நிறுத்தாத வரையில் போர் இடைநிறுத்தம் என்பது அமைதிக்கான வழியாக இருக்காது.
ஹமாஸ் அமைப்பினருக்கு ஒவ்வொரு போர் இடைநிறுத்த காலமும் தங்கள் இராணுவ தளபாடங்களையும், பயங்கரவாத திட்டங்களுக்கான ஆயுதங்களையும் சேகரித்து வைத்து கொள்ளும் காலமாக உள்ளது.
தங்கள் அமைப்பின் பயங்கரவாதிகளை பலம் பெறச் செய்து மீண்டும் அப்பாவிகளை கொல்லத் தொடங்குவார்கள். தற்காலிகமாக போரை நிறுத்துவது எமது நோக்கமாக இருக்கக் கூடாது
நிரந்தரமாக பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதே நோக்கமாக இருக்க வேண்டும். தொடர்ந்து நடைபெறும் வன்முறைக்கு ஒரு முடிவு வர வேண்டும்.
வரலாற்றுத் தவறு
அத்துடன் வரலாற்றுத் தவறுகள் மீண்டும் நடைபெறாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இஸ்ரேலும் மனிதாபிமான சட்டங்களை மதித்து, பொதுமக்களின் உயிரிழப்பை குறைத்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் மனதில் ஏற்பட்டுள்ள காயத்தையும் பதிலடி கொடுக்க வேண்டிய கோபத்தையும் நிதானமாக வெளிப்படுத்தி தவறுகள் நடக்காமல் இஸ்ரேல் பார்த்துக்கொள்ள வேண்டும்” – என்றார்.