வெள்ளப்பெருக்கு தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
மஹா ஓயா ஆற்றின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதால் பல பிரதேச செயலகப் பிரிவுகள் பாரியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன்படி, அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, நாரம்மல மற்றும் தங்கொடுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட மஹா ஓயா ஆற்றின் தாழ்வான பகுதிகளில் பாரியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், தெதுறு ஓயா, தப்போவ, வெஹரலகல, லுனுகம்வெஹர, மவ்வார மற்றும் உடவலவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
மேலும், பொகவந்தலாவ மஹாஎலிய வனப்பகுதி மற்றும் பொகவந்தலாவ ஆகிய பகுதிகளில் பெய்த கடும் மழையுடன் கெசல்கமுஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் பொகவந்தலாவ பிரதேசத்தில் பல தாழ்வான நிலங்கள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, நாட்டின் பல மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் இன்று (20.11.2023) சுமார் 75 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இது தொடர்பில் அப்பகுதி மக்களும், அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை கோரியுள்ளது.