யாழில் தடுப்பு கைதி உயிரிழப்பு விவகாரம் : விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் அதிகாரிகள் குழு நியமனம்
திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தமது மகன் சந்தேகத்தின் பேரில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 4 நாள்களுக்கு மேல் தடுத்துவைத்து விசாரணை செய்த பின்னரே நீதிமன்றில் முற்படுத்தியதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே நேற்றையதினம் (20.11.2023) உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் உள்ளிட்ட இருவர் கடந்த வாரம் திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் நான்கு நாள்களாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படவுமில்லை விடுவிக்கப்படவும் இல்லை என்பதனால் உறவினர்கள் அச்சமடைந்தனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
உயிரிழந்தவரின் தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார். அதனால் சந்தேக நபர்கள் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
பொலிஸாரின் ஆட்சேபனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். உயிரிழந்தவர் சிறைச்சாலையில் இருந்த போது சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் குறித்த நபர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 26 வயதான நாகராசா அலெக்ஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை, சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.