இஸ்ரேலுக்கு நெருக்கடியான நிலை! மற்றுமொரு கிளர்ச்சிப் படை காசாவுக்கு ஆதரவு
காசாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள ஏமனின் ஈரானிய ஆதரவு ஹவுதி கிளர்ச்சி படை, இஸ்ரேல் பணியாளர்கள் உள்ள சரக்கு கப்பலை கடத்தியுள்ளது.
இந்தக்கப்பல் இந்தியாவுக்கு செல்லவிருந்த நிலையில் கடத்தப்பட்டிருக்கிறது.
இது அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவுக்கு நெருக்கடியான நிலையை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்தக் கடத்தல் காரணமாக செங்கடலில் கப்பல் போக்குவரத்து தடைப்படும் அபாயமும் எழுந்திருக்கிறது.
போர் நிறுத்தம்
காசா மீது 44ஆவது நாளாக இஸ்ரேல் இராணுவம் போர் தொடுத்து வரும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து ஐ.நா பொதுச் சபையில் ஜோர்தான் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.
இதை இஸ்ரேல் கடைபிடிக்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் அதை மதிக்காமல் இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
இப்படி இருக்கையில் ஈரானிய ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தற்போது இஸ்ரேல் நாட்டின் பணியாளர்கள் நிரம்பியுள்ள சரக்கு கப்பலை கடத்தியுள்ளனர்.
கிளர்ச்சியாளர்களின் கோரிக்கை
காசா மீதான இஸ்ரேலின் போரை நிறுத்த வேண்டும் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், செங்கடலில் இஸ்ரேலிய கப்பல் எது வந்தாலும் அதனைக் கடத்துவோம் என்றும் எச்சரித்திருந்தார்கள்.
அதாவது, “இஸ்ரேலுடன் தொடர்புடைய அனைத்து கப்பலையும் நாங்கள் தாக்குவோம். எனவே இஸ்ரேலுடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல்களில் பணியாற்றும் தங்கள் நாட்டின் பணியாளர்களை உலக நாடுகள் திரும்ப அழைத்துக்கொள்ளுங்கள். செங்கடல் இனி எங்கள் கட்டுப்பாட்டில்” என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.